மூட்டைக்குள் மௌனிக்கும் என் கவிதைகள்!
போலிக் கவிதைகளெல்லாம் புத்தகமாக மாறுகின்றன, பொய்களின் பக்கங்களுக்குக்கூட பொன்னிற அட்டைகள் அணிவிக்கப்படுகின்றன!
செயற்கை நுண்ணறிவின் விரல்களும் கவிதை எழுதத் தொடங்கிவிட்டன, மின்திரையில் பிறந்த வரிகளெல்லாம் வெளிச்சத்தில் நூலாகிவிட்டன!
ஆனால்…
கைவலிக்க, மைதொட்டு, கண்ணீரைக் கலந்து, இதயத்தைக் காகிதத்தில் இறக்கி இரவெல்லாம் விழித்திருந்து எழுதிய கவிதைகளோ…
பழைய காகிதங்களின் மஞ்சள் நிறப் பக்கங்களுக்குள் தம் முகத்தைப் புதைத்துக் கிடக்கின்றன!
அச்சகத்தின் வாசலறியாமல், அட்டையின் அழகறியாமல், வெளியீட்டு விழாவின் வெளிச்சமறியாமல், ஓர் அறையின் மூலையில் மூச்சடங்கிக் கிடக்கின்றன!
அவற்றுக்கு விருதுகள் வேண்டாம், ஆயிரம் பிரதிகள் வேண்டாம், அடையாளத்திற்காகப் பொய்யான புகழும் வேண்டாம்…
தம் வலியைப் புரிந்துகொள்ளும் ஒற்றை வாசகன் போதும்!
ஆனாலும், உலகம் போலிகளுக்குப் பூமாலை சூட்டிக்கொண்டிருக்கிறது; உண்மைக் கவிதைகளோ தங்களின் கல்லறைகளைக்கூட தாங்களே சுமந்துகொண்டு…
மூட்டைக்குள் மௌனமாகப் புதைகின்றன!
ஒரு நாள் வரும் வரும் நிச்சயமாக வரும்
சே.மு.அஸ்மீத்
கிண்ணியா

கருத்துகள்
கருத்துரையிடுக