இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்களை வாழ விடுங்கள்!

படம்
"விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்!" எங்கள் பிஞ்சு உடல்களை, உங்கள் வஞ்சகக் கரங்களால் தீண்டாது விட்டுவிடுங்கள்! நாங்கள் மலரத் துடிக்கும் மொட்டுகள், எங்களை மொட்டிலேயே கிள்ளி எறியாதீர்கள்... நாங்கள் நாளை உலகைத் தாங்கும் எதிர்காலத் தூண்கள்! பூப்பறிக்கும் வயதில் எங்களுக்கு பயத்தைப் பரிசளிக்காதீர்கள்... பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் வேட்டைக்காரர்களாய் மாறாதீர்கள்! நாங்கள் கேட்பது உங்கள் பரிதாபத்தை அல்ல, எங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும்! பயமின்றி மூச்சுவிடும் காற்றை... பாதுகாப்பான ஒரு நாளை! பெண் என்பதால் எங்களைச் சுருக்கி விடாதீர்கள், வானமே எல்லை என நாங்கள் சிறகடிக்க கொஞ்சம் வழிவிடுங்கள்! எங்கள் கனவுகளைக் கருகச் செய்யாதீர்கள்... எங்களை அமைதியாக, மனிதர்களாக வாழ விடுங்கள்!

மூட்டைக்குள் மௌனிக்கும் என் கவிதைகள்!

படம்
போலிக் கவிதைகளெல்லாம் புத்தகமாக மாறுகின்றன, பொய்களின் பக்கங்களுக்குக்கூட பொன்னிற அட்டைகள் அணிவிக்கப்படுகின்றன! செயற்கை நுண்ணறிவின் விரல்களும் கவிதை எழுதத் தொடங்கிவிட்டன, மின்திரையில் பிறந்த வரிகளெல்லாம் வெளிச்சத்தில் நூலாகிவிட்டன! ஆனால்… கைவலிக்க, மைதொட்டு, கண்ணீரைக் கலந்து, இதயத்தைக் காகிதத்தில் இறக்கி இரவெல்லாம் விழித்திருந்து எழுதிய கவிதைகளோ… பழைய காகிதங்களின் மஞ்சள் நிறப் பக்கங்களுக்குள் தம் முகத்தைப் புதைத்துக் கிடக்கின்றன! அச்சகத்தின் வாசலறியாமல், அட்டையின் அழகறியாமல், வெளியீட்டு விழாவின் வெளிச்சமறியாமல், ஓர் அறையின் மூலையில் மூச்சடங்கிக் கிடக்கின்றன! அவற்றுக்கு விருதுகள் வேண்டாம், ஆயிரம் பிரதிகள் வேண்டாம், அடையாளத்திற்காகப் பொய்யான புகழும் வேண்டாம்… தம் வலியைப் புரிந்துகொள்ளும் ஒற்றை வாசகன் போதும்! ஆனாலும், உலகம் போலிகளுக்குப் பூமாலை சூட்டிக்கொண்டிருக்கிறது; உண்மைக் கவிதைகளோ தங்களின் கல்லறைகளைக்கூட தாங்களே சுமந்துகொண்டு… மூட்டைக்குள் மௌனமாகப் புதைகின்றன! ஒரு நாள் வரும் வரும் நிச்சயமாக வரும் சே.மு‌.அஸ்மீத் கிண்ணியா

போலி

படம்
பொலிவு மிகுந்த போலி உலகம்! மெய்மைக்கு அங்கே வழியுமில்லை - இன்று மேடையில் நிற்பது பொலிவுள்ள போலி! கண்மூடிக் கிடக்கும் உலகினில் இன்று, கவர்ச்சியே நிஜமெனக் கதறுகின்றன! பளபளக்கும் தோற்றமும், பந்தாவின் ஒளியும், பார்வையைக் கவரும் பாசாங்கு நடிப்பும், உண்மையை விடவும் உயர்வாக இன்று, உச்சிப்பில் ஏறி உலகை ஆளுது! இயற்கையின் எளிமை எங்கே தொலைந்தது? செயற்கையின் அழகு சிம்மாசனம் கண்டது! உண்மையின் சொற்கள் ஒடுங்கிப் போனது, ஒளிரும் போலிகள் ஓங்கி வாழ்வது! விடியலின் வெளிச்சம் போலியாய் மின்ன, நிஜத்தின் நிழல்கூட நலிந்து போகுது! இந்தக் காலத்தில் உண்மை தோற்றுப் போக, எங்கு பார்த்தாலும் பொலிவுடைப் போலியே! போலியே.போலியே...