இடுகைகள்

எங்களை வாழ விடுங்கள்!

படம்
"விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்!" எங்கள் பிஞ்சு உடல்களை, உங்கள் வஞ்சகக் கரங்களால் தீண்டாது விட்டுவிடுங்கள்! நாங்கள் மலரத் துடிக்கும் மொட்டுகள், எங்களை மொட்டிலேயே கிள்ளி எறியாதீர்கள்... நாங்கள் நாளை உலகைத் தாங்கும் எதிர்காலத் தூண்கள்! பூப்பறிக்கும் வயதில் எங்களுக்கு பயத்தைப் பரிசளிக்காதீர்கள்... பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் வேட்டைக்காரர்களாய் மாறாதீர்கள்! நாங்கள் கேட்பது உங்கள் பரிதாபத்தை அல்ல, எங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும்! பயமின்றி மூச்சுவிடும் காற்றை... பாதுகாப்பான ஒரு நாளை! பெண் என்பதால் எங்களைச் சுருக்கி விடாதீர்கள், வானமே எல்லை என நாங்கள் சிறகடிக்க கொஞ்சம் வழிவிடுங்கள்! எங்கள் கனவுகளைக் கருகச் செய்யாதீர்கள்... எங்களை அமைதியாக, மனிதர்களாக வாழ விடுங்கள்!

மூட்டைக்குள் மௌனிக்கும் என் கவிதைகள்!

படம்
போலிக் கவிதைகளெல்லாம் புத்தகமாக மாறுகின்றன, பொய்களின் பக்கங்களுக்குக்கூட பொன்னிற அட்டைகள் அணிவிக்கப்படுகின்றன! செயற்கை நுண்ணறிவின் விரல்களும் கவிதை எழுதத் தொடங்கிவிட்டன, மின்திரையில் பிறந்த வரிகளெல்லாம் வெளிச்சத்தில் நூலாகிவிட்டன! ஆனால்… கைவலிக்க, மைதொட்டு, கண்ணீரைக் கலந்து, இதயத்தைக் காகிதத்தில் இறக்கி இரவெல்லாம் விழித்திருந்து எழுதிய கவிதைகளோ… பழைய காகிதங்களின் மஞ்சள் நிறப் பக்கங்களுக்குள் தம் முகத்தைப் புதைத்துக் கிடக்கின்றன! அச்சகத்தின் வாசலறியாமல், அட்டையின் அழகறியாமல், வெளியீட்டு விழாவின் வெளிச்சமறியாமல், ஓர் அறையின் மூலையில் மூச்சடங்கிக் கிடக்கின்றன! அவற்றுக்கு விருதுகள் வேண்டாம், ஆயிரம் பிரதிகள் வேண்டாம், அடையாளத்திற்காகப் பொய்யான புகழும் வேண்டாம்… தம் வலியைப் புரிந்துகொள்ளும் ஒற்றை வாசகன் போதும்! ஆனாலும், உலகம் போலிகளுக்குப் பூமாலை சூட்டிக்கொண்டிருக்கிறது; உண்மைக் கவிதைகளோ தங்களின் கல்லறைகளைக்கூட தாங்களே சுமந்துகொண்டு… மூட்டைக்குள் மௌனமாகப் புதைகின்றன! ஒரு நாள் வரும் வரும் நிச்சயமாக வரும் சே.மு‌.அஸ்மீத் கிண்ணியா

போலி

படம்
பொலிவு மிகுந்த போலி உலகம்! மெய்மைக்கு அங்கே வழியுமில்லை - இன்று மேடையில் நிற்பது பொலிவுள்ள போலி! கண்மூடிக் கிடக்கும் உலகினில் இன்று, கவர்ச்சியே நிஜமெனக் கதறுகின்றன! பளபளக்கும் தோற்றமும், பந்தாவின் ஒளியும், பார்வையைக் கவரும் பாசாங்கு நடிப்பும், உண்மையை விடவும் உயர்வாக இன்று, உச்சிப்பில் ஏறி உலகை ஆளுது! இயற்கையின் எளிமை எங்கே தொலைந்தது? செயற்கையின் அழகு சிம்மாசனம் கண்டது! உண்மையின் சொற்கள் ஒடுங்கிப் போனது, ஒளிரும் போலிகள் ஓங்கி வாழ்வது! விடியலின் வெளிச்சம் போலியாய் மின்ன, நிஜத்தின் நிழல்கூட நலிந்து போகுது! இந்தக் காலத்தில் உண்மை தோற்றுப் போக, எங்கு பார்த்தாலும் பொலிவுடைப் போலியே! போலியே.போலியே...

இதய எமோஜிகள் தேவையில்லை!

படம்
மை தீர்ந்த பேனாவும்... மௌனம் அடைந்த இரவும்... என் கவிதையின் தனிமையை என்னிடம் கேட்கின்றன! பட்டாசாய் வெடிக்க வேண்டிய வரிகள், பயனற்ற சொற்களாய் பக்கங்களின் ஓரத்தில் கிடக்கின்றன. என் விரல் வழியும் உதிரத்தை மை என்று நம்பி வடிக்கிறேன்; ஆனால், அதைப் படிக்க அங்கு யாருமில்லை! இருதய எமோஜிகளும், இணையத்தின் கைவிரல் சின்னங்களும் என் கவிதைக்குச் சற்றும் தேவையில்லை. அவை வெறும் பிளாஸ்டிக் சிரிப்புகள், போலி முகங்களின் அடையாளங்கள்! எனக்கெல்லாம் ஒன்று போதும்... என் வரிகளின் வழியே என் ரத்தம் தொட்டுக் கசிவதை, உன் கண்கள் அல்ல... உன் மனம் முழுமையாகப் புரிந்து கொண்டால் போதும்! காகிதத்தில் சிதறிய என் உயிர்த்தவல்கள், உன் இதயத்தின் ஓரத்தில் ஒரு மெல்லிய சாரலாய் வருடட்டுமே... அதுவே போதும்; இந்தக் கவிஞனின் பிழைப்புக்கும் என் கவிதையின் பிறப்புக்கும்! சே.மு.அஸ்மீத் கிண்ணியா

இயற்கையைத் திருடும் மனிதன்

படம்
இயற்கையைத் திருடும் மனிதன் World Environmental Health Day) செப்டம்பர் 26 பச்சைப் போர்வையை உரித்து எறிந்துவிட்டு, பாலைவனமாய் மாற்றுவது யார் கை? மலைகளை உடைத்துச் சிதறடிக்கும் இவன், மண்ணின் மைந்தனா அல்லது வஞ்சகப் பகையா? மரம் வெட்டிச் சாய்த்துக் கூண்டுக்குள் அடைத்து, விலங்குகள் வாழும் நிலத்தைத் திரித்து, காடுகளை அழித்துச் சிமெண்ட் காடாய் மாற்றி, களவாடிச் செல்கிறான் இயற்கையின் சொத்தை! தடைகள் கடந்து ஓடிய நதிகள் தேங்கிட, நஞ்சு கலந்தே நீரைப் புதைக்கிறான்; சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சினைத் தூவி, சுயநலமாய் வாழ்கிறான் மனிதன் இன்று! இயற்கை அன்னை அழுதிடும் கண்ணீர், வெள்ளமாய் வந்து மிரட்டுவது எப்போது? வாழ்வளித்த பூமியைத் திருடிடும் மனிதன், தன் சுடுகாட்டைத் தானே தேடுகிறான்!

மூச்சு விடும் பூமி

படம்
விடியலின் தென்றலில் விஷம் கலந்திடாமல், படியும் பனித்துளியில் நஞ்சு படிந்திடாமல், காத்திட வேண்டும் இந்த பூமியின் சுவாசத்தை! தாகம் தீர்க்கும் நீரினில் தூய்மை ததும்பட்டும், மக்கள் நடமாடும் வழியெங்கும் பசுமை கொஞ்சட்டும்! குப்பைகள் இல்லாத கூடாரமாய் நம் ஊர் மாறட்டும், குறையற்ற சுகாதாரமே மனித குலத்தின் வேராகட்டும்!

அது ஒரு காலம்

படம்
உடன் வராத தூரங்களை விஉள்ளத்தில் நிறைந்திருக்கும் நினைவுகளே நட்பின் உண்மையான சாட்சி நண்பர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற சிரிப்புச் சத்தம் காலத்தின் சுவரில் என்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும் காலங்களின் பிண்ணனியில் கரைந்து காலம் முழுதும் ஞாபகங்கள் பிண்ணனியில் கரையாமல் நிற்கிறது இறைவன் வரம் ஒன்று தந்தால் நான் கேட்பது என்னவோ நான் நண்பர்களோடு இருந்த நாட்களைத்தான் எப்போதும்...